Monday, 25 July 2016

இந்தியாவின் பெரிய தெப்பக்குளம் (ஹரித்ரா நதி)



கோவில்பாதி, குளம்பாதி' என்ற பழமொழியை தனக்கே உரித்தாக்கிக்கொண்ட ஊர் மன்னார்குடி. அந்தக் காலத்தில் மொத்தம் 98  குளங்கள் மன்னார்குடியில் இருந்துள்ளது ஆனால் இப்பொழுது பாதிக்குமேல் இல்லை. மன்னார்குடியில் இன்றும் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது..  


ஹரித்ரா நதியின் பெருமை

கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார் என்றும், குளத்தில் கண்ணன் கோபிகையருடன் ஜலக்கிரிடை செய்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பூச்சுப்பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.


இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன.

ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்கிறார்கள்.

இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள்.

மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ராநதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் ஜலக்கிரிடை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

  இந்தியாவின் பெரிய தெப்பக்குளம்  

         1,158 அடி நீளம்,
            847 அடி அகலம்,
            23 ஏக்கர்.